எனக்கு கொள்ளை காதல்
இவள் மீது - என்
தாயை விட.
எனை ஈன்றவளின்
பார்வையில் நான் அழுத்தக்காரி
காரணம் - கண்ணம்மாவின்
கண்ணீருக்கு மட்டும்
நான் கரைந்து போகும்
மாயம்தான்.
பள்ளியில்லிருந்து
சோர்வோடு வருவேன் என்று
தின்பதற்கு பண்டங்கள்
செய்து வைப்பாள்.
இல்லையேல் என்
கைபிடித்து அழைத்துசென்று
முக்குட்டு கடையில்
பழம் வாங்கி கொடுப்பாள் .
என் அன்னையின்
மார்பு முட்டி பசி ஆரிய
தருணங்களை விட
இவளின் கதை கேட்டு
அவள் மேல் கால் போட்டு
கட்டிக்கொண்டு
உறங்கிய கணங்களே
சொர்க்கம்.
இன்றும் நான்
செய்யும் குறும்புகளில்
நியாயம் கற்பிப்பாள்.
தவறே செய்தலும்
தட்டி கொடுப்பாள் .
தலைமுறை மூத்தவள்
என்றாலும் ,
மிஞ்சி நிற்கும் அவளின்
வெகுளி தனத்திற்கு
எதை ஈடு கொடுக்க?
அவளின் சின்னப் பானைச் சட்டியில்
வைத்த சில்லரைப் பணம்
களவாடப்பட்டால் -
விசாரணை வைத்து
தோற்றுப் போவாள்.
என்றாலும் என்
நிதியமைச்சகமும் அவள்தான்
கருவூலமும் அவள்தான்.
ஊரார் கண் படும்
என்று எனக்கு
ஓயாது சுற்றிப்போடுவாள்.
சமயங்களில் என்
எண்ணங்களை உள்வாங்கும்
சினேகிதி ஆவாள்.
எப்போதும் என்னை
ஓய்வெடுக்க சொல்லும்
ஒரே ஜீவன் அவள்.
அறியாத நாட்களில்
என் உதிரத் துணியை கூட
துவைத்து உலர்த்தி இருக்கிறாள்.
இப்போதும்
கண்ணம்மா என்று
அனைத்துக் கொண்டால்
முத்ததோடு
கண்ணீரும் சிந்துவாள்.
அவளும் என்னைப் போல்
சோகத்தை உள்ளடக்கி
புன்னகை வீசுகிறாள்.
அதிகமாய் அவளை
உறவுமுறை வைத்து
அழைத்தது இல்லை
எப்போதும் கண்ணம்மா தான்
அவள் பாச கிடங்கிற்கு
ஒரு பறை சான்று
சில சமயம்
என் தந்தையோடு சேர்த்து
என்னையும் பெற்றாளோ
என தோன்றும்.
வாழ்கை ஓட்டத்தில்
உன்னை கவனிக்க
மறந்தேனோ!
உண்மையில் அதிகமாய்
வலிக்கிறது
என்றாலும்
நீ என்னை மன்னிப்பாய்,
என் செல்ல கண்ணம்மா..
என் அன்பு கண்ணம்மா...