Tuesday, December 20, 2011

மெல்லத் தமிழ் இனி ......


   திராவிட மொழியான தமிழ் மொழி பலதரப்பட்ட தமிழ் குடிமக்களால்  உலகமெங்கும் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பலவகையான மொழிகளுள் செம்மொழி  என்கிற உயரிய நிலைப்பாட்டினை அடைந்த முதல் மொழி தமிழ் மொழிதான். உலகில் தொன்றுதொட்டு வாழும் சில மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். நம் தமிழ் மொழியின் இலக்கிய படைப்புகள் இரண்டாயிரம்  ஆண்டுகள் முற்ப்பட்ட  மக்களின் வாழ்வியல் மற்றும் மொழியியல் வரலாற்றினை நமக்கு பறைசாற்றுகின்றன. திராவிட மொழிகளிலே பழமையான ஆவன வகை இலக்கியங்கள் கொண்டுள்ள மொழி தமிழ் மொழிதான். தமிழ் இலக்கியங்களின் தனித்தன்மையும், வகைதிரிபு வளமும் ஒருங்கே பெற்ற காரணத்தால், தமிழ் மொழி தலைச்சிறந்த வாழ்வியல் மரபினையும், இலக்கியங்களையும்  இந்த உலகிற்கு தந்துள்ளது.  இத்தனை அறிய சிறப்புகளையும், வரலாற்றினையும் கொண்ட தொன்மையான தமிழ் மொழி, நாம் வாழ்ந்து கொண்டுஇருக்கும்  இந்த காலகட்டத்தில் எத்தகைய பரிநாமங்களுடனும், பரிநாமத்தேவைகளுடனும் வழக்கில் உள்ளது என்பதை உணர அவசியமாகிறது.      

   தமிழர்கள் வாழ்வதால் தமிழ் நாட்டில்  அரசியல் நோக்குடனோ  அல்லது உண்மையான தமிழ் மொழி பற்றினாலோ ஆங்கிலத்தை தவிர பிறமொழிகளை பயிற்று மொழியாய் அனுமதிக்கப் படவில்லை.   எனினும் உலகப் பொதுமொழியான ஆங்கிலம் மெல்ல மெல்ல தமிழ் மொழியில் கருத்து பரிமாற்றத்தின்போது வார்த்தைகள் மற்றும் வழக்கினையும் புறம் தள்ளி மனித மொழித்தொடர்பில் கோலோச்சுகிறதாக ஒரு குற்றச்சாட்டு. ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் அது உண்மையோ என்று தோண்றுகிறது. இதை மனதில் கொண்டே தமிழ் இனி மெல்லச் சாகும் என்று இடைக்காலத்தில் சொல்லி சென்றுள்ளதாய் கூற்று.         

   நம் தாய் மொழி தமிழாய் இருந்தாலும், நம்மை ஆதிக்கம் செய்ததால் ஆங்கிலத்தை  பயிற்று மொழியாய் ஏற்று கொண்டோம். தமிழை விட்டுக்கொடுக்காமல் ஆங்கிலத்தோடு பிறமொழிகளையும் போற்றி இருக்கவேண்டும்.  இதை வலியுறுத்த காரணம், நம் தமிழ் மொழி மூலம் உரையாடும் போது ஆங்கில வார்த்தைகளின் கலப்பு களைய முடிய வகையில் பிணைந்துள்ளது. மேலும் ஆங்கில வழி கல்வியின் மூலம் இப்போது பல தமிழர்களுக்கு தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டும் இருக்கிறது. இவர்களக்கு தமிழில்  எழுதவும், படிக்கவும் தெரியாது. இப்படி சொல்லிக்   கொள்வதில் தமிழர்கள் சிலர் பெருமையாகவும் நினைக்கிறார்கள். இந்த எண்ணிக்கை சில வருடங்களாக அதிகரித்து உள்ளது என்பது வேதனையான செய்தி.
   உலகமயமாக்குதலால்  மேலை நாட்டு கலாச்சாரம், உபயோகப் பொருட்கள், தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழிற்பரிவர்தனையின் காரணமாக நம் தமிழ் நசுங்கிகொண்டு இருக்கிறது என்பது மறுக்கமுடியா உண்மை. இதை முறியடிக்க சில அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன. இதன் விளைவாக தான் இன்று bakery  - அடுமனையாகி, furnitures - அரைகலன் என்று மாறி பெயர் பலகைகளில் மட்டும் உள்ளது. தமிழகத்தில் உயர் கல்வி அனைத்தும் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் கல்வி அனைத்தும் அந்நாட்டு மொழிகளிலே புகட்டப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்று பார்த்தால், புதிதாய் அறியப்படும் ஒவ்வொரு ஆங்கில வார்த்தைகளுக்கும் தங்கள் மொழியில் இணையான வார்த்தை உருவாக்கி தங்களின் பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

   உண்மையை நிலையைப் நோக்கினால் தமிழில் உள்ள எத்தனையோ சொற்களுக்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லை. உதாரணம் - மெய்சிலிர்க்கிறது என்கிற வார்த்தைக்கு இணையான  ஆங்கில வார்த்தை கிடையாது. நிதர்சனமாய் தமிழை யார் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் கிராமத்து வாசிகள்தான். நகரங்களை  காட்டிலும் கிராமங்களில் உலகமயமாகுதலின் தாக்கம் குறைவாக இருப்பதன் காரணமே அது. கிராமத்து வீட்டு அடுக்களையில் தொடங்கினால் அடுப்பு, சட்டி, பானை, கூழ், விறகு, சோறு,  என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆதலால்தான் கிராமத்தில் வாழும் சொக்கனும் சொக்கியியும்  நம் தமிழை வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் இந்த உலகமயமாகியுள்ள இணையம் மற்றும் பிற ஊடகங்களின் வாயிலாக எண்ணங்களை பரிமாறிக்கொள்கிறார்கள் . இந்த கண்ணோட்டத்தில் தமிழ் வளர்ந்துகொண்டு இருக்கிறது.    என்றாலும் வெகு சிலரைத் தவிர  மற்ற எல்லோரும் பிற மொழி சொற்களை  மாற்றம் இன்றி தங்களின் படைப்புகளில் பயன்படுத்துகிறார்கள். அதைபோல்  நகரத்து வீட்டின் அடுக்களையில் உள்ள gas stove, cooker, cylinder, lighter, rice எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்மாய் கிராமத்து மண்ணை   மிதித்து ஆகிரமிப்பு செய்யயுள்ளது. ஆகையால் நம்மிடையே ஊடுருவியுள்ள இந்தகைய ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கம் புழக்கத்திற்கு அவசர தேவையாகிறது.

   பிற நாட்டு நுட்ப்பத்தால் அறியப்படும், அடையலாம் கொள்ளும் சொல் எதுவாக இருந்தாலும் அதற்கு இணையான தமிழாக்கத்தில்தான் தமிழகத்தில் அறியப்பட வேண்டும்.   ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நாம்  நாள் தோறும் இறக்குமதி செய்துக்கொண்டு இருக்கும்  ஆங்கில வார்த்தைகளுக்கு நிகறான தமிழ் சொற்கள் இல்லை. முதலில் இதை சமன் செய்ய வேண்டும். பிறகு வழக்கத்திற்கு கொணரவேண்டும். ஒரு கோணத்தில் இருந்து  பார்த்தால் இது ஒரு தீர்வாகும்.  தமிழ் மொழி ஆய்வாளர்கள் இந்த தலையாய கடனை ஆற்றவேண்டும். புதிய சொற்கள் கொண்ட புதுபிக்கப்பட்ட அகராதியை  வருடம்தோறும் வெளியிடவேண்டும். அந்த புதிய வார்த்தைகளை பேச்சு வழக்கில் பயன்படுத்திட ஆவனசெய்ய வேண்டும். இலக்கியகள், ஊடகங்கள் மூலமாக பரப்பும் வகை செய்ய வேண்டும். மேற்கூறிய நிலையினை தமிழ்  அடைந்தால் நம் தமிழ் மொழி எப்போதும் வளர்ந்துகொண்டே தான் இருக்கும் என்பதில் சிறுதும் ஐயமில்லை.

               வாழ்க தமிழ்!                                                 வளர்க பாரதம்!